ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் அவர்கள் எனக்கு இந்த புத்தகத்தை அன்போடு அளித்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. இதே நிகழ்வு 2003 'றில் நடந்திருந்தால் இரண்டே நாட்களில் புத்தகத்தை படித்து முடித்திருப்பேன், அப்போது தாய் மொழியின் வழியே கேமரா தொழில்நுட்பத்தை கற்க எனக்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. அப்போது சினிமாவை ஒரு ஆரம்பக்கட்ட மாணவனாக கற்றுகொள்வதைத் தவிர வேறு வேலையும் இல்லாமல் இருந்தது . இன்று ஒரு முழுநீள திரைப்படம் எடுக்க முயன்று வரும் இருத்தல் சார்ந்த அலைகழிப்புகளுக்கு மத்தியில் இயங்கும் என் நிலை வேறு. அதனால் தான் இந்த தாமதம்.
ராஜ்குமாரை போல் தொழில் நுட்ப்ப அறிவும், செய்முறை அனுபவமும் ஒரு சேர பெற்ற ஒருவரால் மட்டுமே இத்தகைய புத்தகத்தை கொண்டு வர இயலும். நடைமுறைக்கு தேவையான விடயங்கள் என்னவென்று அவர் அனுபவத்தில் கற்ற பாடங்களை மிகவும் அக்கறையோடு எளிமைப்படுத்தி தந்திருக்கிறார். தொழில்நுட்ப வல்லுனர்களின் பிரத்யேக தன்மையில் இல்லாமல், சினிமா மீது ஆர்வம் கொண்டிருக்கும் எல்லோருக்குமான புத்தகமாக இருப்பதன் காரணம் இது தான்.
இந்த புத்தகம் சினிமா என்ற ஊடகம் உருவான துவக்க காலத்தில் இருந்து , இன்று வளர்ந்து வரும் டிஜிட்டல் சினிமா வரை, அதன் தொழில்நுட்பத்தை மையமாக கொண்டிருக்கிறது. வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தொழில்நுட்ப்ப வளர்ச்சியின் பரிமாணத்தை, முக்கியமாக ஒளிப்பதிவு சார்ந்த அடிப்படை கூறுகளை எளிய வரைபடங்களின் மூலமும் எளிய சொல்லாடலின் மூலமும் விளக்குவதில் வெற்றி கண்டுள்ளது. இது போன்ற தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்களில் தமிழ் படுத்துதல் என்பது கடினமானது, அந்த காரியத்தை எந்த குழப்பமும் தராமல் கடந்திருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. திரைப்பட கல்லூரிக்கு சென்று சினிமா கற்க வாய்ப்பில்லாதிருக்கும் பல தமிழ் மாணவர்களுக்கு, தங்களது தாய் மொழியில் இப்படி ஒரு எளிமையான புத்தகம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை தரக் கூடியது. தொழில் நுட்ப்ப வார்த்தை பிரயோகங்கள் கண்டு அவர்கள் இனி அஞ்சத் தேவையில்லை. மேலும் வகுப்பறையில் மாணவர்கள் எடுக்கும் 'notes' போன்ற வடிவத்தில் அமைந்திருக்கும் இந்த புத்தகம் நமக்கு நெருக்கமான உணர்வை ஏற்படுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள், நாடக ஒளியமைப்பு, பயிற்சிப்பட்டறைகள் என்று பன்முகத் தன்மை கொண்ட ஒருவராய் விளங்குகிறார். இப்படிப்பட்டவர்களை நம் சூழலில் காண்பது அரிது. இவர்களை போன்றவர்கள் தான் சினிமாவை பற்றிய வெறும் கனவுகளை மட்டும் அளிக்காது, நமக்கு அதன் நடைமுறைத் தன்மையை, அது இயங்கக்கூடிய யதார்த்தத்தை தெளிவுடன் அடையாளம் காட்ட முடியும். சினிமாவின் அடிப்படைகளை அறியாது ஒரு விபத்தை போன்று ஒரு நல்ல படத்தை யாரும் எடுத்துவிடலாம் ஆனால் அந்த வெற்றியை தொடர்வது என்பது இயலாது , சாயம் வெளுத்துவிடும். என் நண்பர் ஒருவர் நகைச்சுவையாக கூறுவார், "தமிழில் தற்போது இரண்டு வகையான இயக்குனர்கள் தான் உள்ளார்கள், ஒரு வகையினர் சினிமா எடுக்கத் தெரியாதவர்கள் , இன்னொரு வகையினர் சினிமா எடுக்க தெரிந்தது போல் நடிப்பவர்கள்". இந்த நிலை ஒருவகையில் உண்மை என்றாலும் இது தொடராமல் இருக்க வேண்டும். ராஜ்குமாரை போன்றவர்கள் மேலும் இது போன்ற ஆரோக்கியமான காரியங்களில் ஈடுபட வேண்டும். இந்த புத்தகத்தின் பின்பான உழைப்பு என் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. 'டிஜிட்டல் சினிமா' குறித்து தனது நடைமுறை அனுபவங்களை இதே எளிமையோடு விரிவாக புத்தகம் எழுத வேண்டும் என்ற கோரிக்கையை ராஜ்குமாரிடம் முன்வைக்க விரும்புகிறேன், இன்றைய சூழலில் மிக்க பயனுள்ளதாக இருக்கும். -மாமல்லன் கார்த்தி-
ஆசிரியர்: சி.ஜெ. ராஜ்குமார்
பதிப்பாளர்: தி. திருநாவுக்கரசு
வெளியீடு: கீற்று பதிப்பகம்
விலை: 150 /-
i need this book where to get
ReplyDeletenew booklands chennai- o44 28158171
ReplyDeletetirunavukarrasu publisher- 9150079632