Sunday 30 September 2012

தமிழ்நாடு திரைப்பட இயக்கம்

தமிழ்நாடு திரைப்பட இயக்கம் - சில நினைவுகள்

சிறு வயதிலிருந்தே நிறைய ஆங்கிலப்படங்களை பார்த்து வளர்ந்தவன் நான்.ஃபிலிம் இன்ஸ்டிடுயூட் படிப்பு முடித்துவிட்டு சென்னைக்கு வந்த புதிது. “காதல் கோட்டை” யில் உதவி ஒளிப்பதிவாளராக வேலை. நண்பர் Velmurugan Ganapathy மூலமாக “தமிழ்நாடு திரைப்பட இயக்கம்” பற்றி அறிந்து அவர்கள் மூலமாக ஃபிலிம் சேம்பரிலும், மனோரமா ஃபிரிவ்யூ தியேட்டரிலும் ஏறத்தாழ உலகிலுள்ள எல்லா மொழி தி
ரைப்படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதுவரை ’டேவிட் லீன்’ தான் உலகின் சிறந்த இயக்குநர் என்று நினைத்திருந்தேன்.

அதே வேலையாக தினமும் தொடர்ந்து பல வெளிநாட்டுத் திரைப்படங்களை பெருந்திரையில் பார்த்துக்கொண்டே இருந்த காலம். படம் பார்த்த பிறகும் சேம்பர் வாசலிலேயே நின்று கொண்டு (அவர்களாக வெளியேற்றும்வரை) அந்தப்படம் பற்றி நண்பர்களோடு விவாதித்த பொழுதுகள் மறக்க முடியாதவை!

”ரெட் பியர்ட்” தான் நான் பார்த்த முதல் குரசோவா படம். அவருடைய திரைமொழியில் பிரமித்துப் போய் ரஷமோன் உள்ளிட்ட அவருடைய எல்லா படைப்புகளையும் பார்த்து மனதில் நிரந்தரமாக பதிய வைத்துக்கொண்டேன்.

”ரோடு ஹோம்” நான் பார்த்த மிகச்சிறந்த காதல் படம். எளிய காதல் கதைதான். அதற்குள் அந்த நாட்டின் அரசியல் சூழலையும் கதாபாத்திரங்களின் சின்னச் சின்ன உணர்வுகளின் மூலம் இயக்குநர் ஜாங் யிமொ கதை சொல்லியிருப்பார். சினிமாவில் ஒரு நவீன கவிதை படைத்திருப்பார்.

உலக சினிமா பார்க்க விளைபவர்களுக்கு என் பரிந்துரை முதலில்’ரோடு ஹோம்’ பாருங்கள்.

ஃபிலிம் சேம்பரில் 2002 வருடம் சார்லி சாப்ளினின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் திரு.பாலு மகேந்திரா தலைமையில் நடந்த போது “ஆயிஷா” குறும்படம் உலக விருது வாங்கியதற்காக எங்கள் குழுவினரை “தமிழ்நாடு திரைப்பட இயக்கம்” கவுரவித்தனர்.

“சினிமா பாரடைசோ” படத்தின் இறுதி காட்சியில் அவன் சிறு வயதிலிருந்து படம் பார்த்த தியேட்டரை இடிப்பார்கள். அந்தக் காட்சி பார்த்தபோது என்ன உணர்ந்தேனோ அதே மாதிரியான வலிதான் “தமிழ்நாடு திரைப்பட இயக்கம்” இப்பொழுது இல்லை என்பதை ஜீரணிப்பதும்.

“தமிழ்நாடு திரைப்பட இயக்கத்தை” தங்களால் இயன்ற அளவு மிகச்சிறப்பாக நடத்திய திரு.தி.சு.சதாசிவம் மற்றும் திரு.ராஜேந்திரன் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!

டிவிடி க்களின் வருகைக்குப் பிறகு திரையரங்குகள் மட்டுமே பாதிக்கப்பட்டதாக பரவலான கருத்து உண்டு. ஆனால் அதனோடு சேர்ந்து பல திரைப்பட இயக்கங்களும் மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கிறது.

ஒரு திரைப்படத்தை பார்வையாளர்களோடு சேர்ந்து பெரிய திரையில் பார்க்கும் அனுபவம் டிவிடி யில் பார்க்கும்போது கிடைப்பதேயில்லை!

1 comment:

  1. கூட்டுக்குடும்பம் என்ற வாழ்வியல்முறை எப்படி வழக்கொழிந்துபோனதோ அதே போல பெரிய திரையில் சினிமா பார்ப்பதும் வழக்கொழிந்துபோகும் என்பது என் கணிப்பு.

    ReplyDelete