Wednesday, 20 November 2013

ஒளிப்பதிவு பயிற்சி பட்டறை!!!

இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ கே. கே. நகர் தியேட்டர் லேபில் ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை நடத்தியது!!! (நவம்பர் 16 & 17).... பயிற்சியளித்தபோது....!!!!
 






Thursday, 14 November 2013

நாட்டுவைத்தியமும் சினிமாத் தொழில்நுட்பமும்!


காலச்சுவடு (ஃபிப்ரவரி 2011) இதழில் வெளியான  "அசையும் படம்" நூல் விமர்சனம். நன்றி திரு. அம்ஷன்குமார்!

மதிப்புரை
நாட்டுவைத்தியமும் சினிமாத் தொழில்நுட்பமும்!

சினிமா அசைகிற படமாக இருப்பதால்தான் அது கவர்ச்சிக்குரியதாகவும் மாய நிலை கொண்டதாகவும் வெகுகாலம் விளங்கியது. சினிமா பெரிதும் விரும்பப்பட்டதற்கும் முக்கியக் காரணம் அது ஏதோ மந்திரவிதிகளுக்குக் கட்டுப்பட்டதுபோல் தோன்றியதுதான். சினிமாவை மக்கள் நெருங்கிவிடக் கூடாது என்பதில் சினிமா உலகினரின் சதியும் கலந்திருந்தது. ஸ்டுடியோ படப்பிடிப்பை மக்கள் பார்க்கக் கூடாது என்பதிலிருந்து அது தொடங்கி படத்தில் நடிப்பவர்கள்கூட கேமரா வழியாகப் பார்க்க அனுமதி கிடையாது என்பதுவரை அது தொடர்ந்தது. ஒளிப் பதிவாளர்கள்கூடத் தங்கள் உதவியாளர்களுக்குத் தாங்கள் அறிந்தவற்றையெல்லாம் சொல்லித்தந்து விடாது மூடுமந்திரமாகச் சிலவற்றை வைத்திருப்பார்கள். இதை அந்நாளைய ஒளிப்பதிவாளர்களிடம் பணியாற்றிய உதவியாளர்கள் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நாட்டு வைத்தியர்கள் சில வைத்தியமுறைகளைத் தங்களது சீடர்களுக்குக்கூடக் கற்றுத்தர மாட்டார்கள் என்று சொல்வதைப்போலத் தான் இதுவும்.

அறிவைப் பகிர்ந்துகொள்வதால் ஆர்வமும் வளர்ச்சியும் கூடுமே தவிர குறையாது. விஞ்ஞான வளர்ச்சி கபடங்களுக்கு இடம் தருவதில்லை. இப்பொழுது டிஜிடல் உபகரணங்களுடன் அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கான கையேடுகள், வீடியோ விளக்கங்கள் ஆகியன தரப்படுகின்றன. யார் வேண்டுமானாலும் கேமராவை இயக்கலாம். அதே நேரம் ஒளிப்பதிவு பற்றிய கூடுதலான அறிவையும் பெற வேண்டும். இதற்கும் இலக்கணப் புத்தகங்கள் உண்டு. ஆனால் இன்னமும் ஒளிப்பதிவு பற்றிய அறிவைத் தமிழில் விளக்கும் ஆரம்ப நூலொன்று வரவில்லை என்னும் குறையை நீக்கும் வண்ணம் ‘அசையும் படம்’ என்னும் நூல் வெளிவந்துள்ளது. இதை எழுதியுள்ள சி.ஜெ.ராஜ்குமார் முறையாக ஒளிப்பதிவைப் படித்தவர். பல விருதுபெற்ற குறும்படங்களையும், முழு நீளப்படங்களையும் ஒளிப்பதிவு செய்தவர். அவை மட்டுமல்ல. ஆரம்ப நிலை ஆர்வலர்களுக்கு ஒளிப்பதிவின் நுட்பங்கள் புரியுமாறு பயிற்சி வகுப்புகள் எடுப்பதில் திறமை வய்ந்தவர். அந்த வகுப்புகளில் சொல்லித் தந்தவற்றை முதலில் தமிழ் ஸ்டுடியோ.காம் என்கிற இணைய இதழில் எழுதினார். அதன் செம்மை வடிவமே இந்நூல்.

ஒளிப்பதிவு பற்றிய ஒரு சரித்திர கண்ணோட்டத்துடன் இந்நூலை எழுதியுள்ளார். கேமரா அப்ஸ்குராவிலிருந்து ஒளிப்பதிவின் கதையைத் தொடங்குகிறார். பின்னர் பிலிமின் வருகை, பிலிம் கேமரா, லென்ஸ், பில்டர்களின் உபயோகம், லேப், ஒளி விளக்குகள், ஒளியமைப்பு முறைகள், டிஜிடல் சினிமா என்று சகல நுணுக்கங்களையும் பூடகம் தவிர்த்த நடையில் எழுதியுள்ளார். நிறைய புகைப் படங்களும் விளக்கப்படங்களும் நூலின் பயனை அதிகரிக்கின்றன. ஓரளவு செய்முறை நூலான இதில் தமிழ்ப் பட உதாரணங்கள் கொடுத்திருந்தால் படிப்பவர்களுக்குத் தாங்கள் படித்ததை உடனே நேரடியாகப் பார்த்த படங்களுடன் பொருத்திப் பார்க்க உதவியாக இருந்திருக்கும். கலைச் சொற்கள் சுலபமாகப் புரிந்துகொள்வதற்கும் எடுத்தாள்வதற்கும் ஏற்றாற்போல் மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். எல்லா ஆங்கில கலைச் சொற்களையும் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை. ஒரே அமர்வில் நூல் முழுவதையும் படித்துவிடலாம் என்பது இதன் சிறப்பு. படித்து முடித்துவிட்டுத் தூரப்போடுகிற நூல் இல்லை இது. திரும்பத் திரும்ப புரட்டப்பட வேண்டிய நூல். இதை ஒளிப்பதிவாளரின் கையேடு என்று ராஜ்குமார் கூறியிருப்பது மிகவும் பொருத்தமானது.

அசையும் படம் - இரண்டாம் பதிப்பு நூல் வெளியீடு!